குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி பிரதேசத்தின் வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து பொது மயானம், நிலாவெளி, வேலூர், அடம்போடை, சுனாமி வீட்டுத்திட்டம், ஜெய்க்கா வீட்டுத்திட்டம் ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் பொதுவான மயானமாக காணப்படுகின்றது. இந்த மயானம் இதுவரை பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரையில் தெளிவற்ற தன்மையுடன் சீரமைக்கப்படாமல் உள்ளமையால், அதனை உடன் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மயானத்திற்கு செல்லும் பாதையில் எந்தவொரு அடையாளப்பலகையும் இல்லாத நிலையில், பிரதேச சபையினரும் பொதுமக்களும் இதனை கண்டறிய முடியாத சூழல் உருவாகியுள்ளது. மயானத்திற்குச் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், இதுவரை பொதுமக்கள் அல்லது பிரதேச சபை எந்தவொரு சீரமைப்பு பணிகளிலும் ஈடுபடவில்லை. மேலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மையால், அங்கு செல்ல பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மயானம் முழுவதும் முட்கள், கடற்தவாரங்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற இறுதிக் கிரியைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் கழிவுகளால் நிரம்பி காணப்படுகிறது. மேலும், குறுகிய இடத்திற்குள் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதால் பழைய சடலங்களின் எலும்புகள் நிலத்தின் மேலே வெளிப்படையாக காணப்படுகின்றன. சில பொதுமக்கள் உடலை சவபெட்டியுடன் அடக்கம் செய்வதால், அந்தப் பெட்டிகள் நீண்ட நாட்கள் அழியாமல் இருப்பது ஒரு புதிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதனால், இனி அடக்கம் செய்யப்படும் சடலங்களுக்கு இடமில்லாத நிலை உருவாகலாம் என்ற கருத்துக்களும் எழுத்து வருகின்ற தன்மை காணப்படுகிறது.


எனவே, அனைவருக்கும் பொதுவானதாக உள்ள இம்மயானத்தை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு பொது அமைப்பை உருவாக்கி, அதனை முறையாக பராமரித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் குறித்த பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.