தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) காலை 7.00 மணியளவில் தம்பலகாமம் நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
1998 பிப்ரவரி 1ம் திகதி, தம்பலகாமம் பாரதிபுரத்தில் இடம்பெற்ற இக்கொடூர படுகொலையில் ஆறுமுகம் சேகர் (32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (17), பொன்னம்பலம் கனகசபை (47), முருகேசு ஜனகன் (18), நாதன் பவளநாதன் (29), சுப்பிரமணியம் திவாகரன் (23), குணரத்தினம் சிவராஜன் (23) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு முறையிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முதலில் 13 காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்குப் மாற்றப்பட்டது.


இந்த வழக்கில் 5 காவல்துறையினருக்கு 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26ம் திகதி, அந்நாளில் கந்தளாய் காவல் பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றியவர் உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டிய தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்குத் தீர்ப்புக்கு பின்னர், படுகொலை செய்யப்பட்டவர்களின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.