மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 34 வயதுடைய ஆசிரியை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குறித்த பெண் மீது கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த பெண் இதுவரை திருமணமாகாதவராகவும், ஆசிரியையாக பணியாற்றி வந்தவராகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார், இதில் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை. இருப்பினும், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.