மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெண்டிலேட்டரின் உதவியுடன் செயற்கைச்சுவாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அவருக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படும், அவரது உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் நிகழ்ந்தால் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தன.

மாவை சேனாதிராசாவின் நிலைமை கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதையும் மருத்துவத்துறை வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் சுட்டிக்காட்டின.

மருத்துவர்களால் சரி செய்ய முடியாதளவில் அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் இந்த அசாதாரண நிலைமையிலிருந்து மீண்டு வருகிறதா என்பதற்காக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது?

இன்று அதிகாலை 4 மணியளவில் மாவை சேனாதிராசா வீட்டு குளியலறைக்கு செல்லும் போது கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் இருந்தே அவரில் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

முன்னதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதல் வலுத்தது, கட்சிக்குள் தான் ஒதுக்கப்பட்ட விவகாரங்களினால் அவர் அதிக மனஅழுத்தத்தில் இருந்ததையும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி மோதல் விவகாரங்கள் மற்றும் அவரை ஒதுக்கும் நடவடிக்கைகள் உச்சகட்டமடையும் சந்தர்ப்பங்களில் அவர் அதிக இரத்தஅழுத்தத்திற்கு உட்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்னதாக, அவர் சில மாதங்களின் முன்னரும் சிறியளவிலான மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது.

தற்போது, கட்சித் தலைமை பதவியிலிருந்தும் அவர் ஒதுக்கப்பட்ட பின்னர் அதிக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி தொடர்ந்து பேசியும் வந்துள்ளார். தனது நீண்ட போராட்ட, அரசியல் வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை தான் சந்தித்ததேயில்லையென்றும் குறைபட்டு வந்துள்ளார்.

அவரது உடல் நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள மகளும், பிரித்தானியாவிலுள்ள மகனும் விடுமுறையில் இலங்கை வந்து, தந்தையுடன் ஒன்றாக சில நாட்கள் இருந்துள்ளனர். மூன்று பிள்ளைகளும் அருகிலிருந்த சமயத்தில், கட்சி முரண்களும் அடங்கியிருந்த பின்னணியில், மாவை சேனாதிராசா மகிழ்ச்சியாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

சில நாட்களின் முன்னர், கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச்செயலாளரும் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து விட்டும் வந்திருந்தனர்.

இந்த நாட்களில் மாவை சேனாதிராசா தனது வீட்டில் சில தடவைகள் விழுந்ததாக அறிய வருகிறது.

அண்மை நாட்களாக  அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டதாகவும், இன்று அதிகாலையளவில் அது மோசமடைந்ததாகவும் தெரிய வருகிறது.

மாவை சேனாதிராசா முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரது வாகனச்சாரதியாக இருந்தவரின் பெயரைச் சொல்லி அழைத்து, குறிப்பிட்ட கோப்புக்களை வாகனத்தில் ஏற்றுமாறும், கட்சி வழக்கு நாளை வருவதால் உடனடியாக யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென அதிகாலை 1 மணியளவில் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தன்னை நாடாளுமன்ற உறுப்பினராகவே கருதியுள்ளார்.

இதனை தொடர்ந்தே, அதிகாலையில் தவறி விழுந்துள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மூளை நரம்புகள் வெடித்ததை தொடர்ந்து அவர் விழுந்தாரா அல்லது விழுந்த பின் மாரடைப்பு ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

எனினும், தற்போதைய நிலைமையில், அவரது உயிருக்கு ஆபத்தானளவில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, சுயநினைவிழந்த நிலையில், செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

வைத்தியசாலைக்குள் எதிர்ப்பு

மாவை சேனாதிராசாவின் நிலைமையறிந்து கட்சிப் பிரமுகர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்வையிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோரும் மாவையை நேரில் சென்று பார்வையிட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் நேரில் சென்று பார்வையிட்டார்.

நிர்வாகச் செயலாளர் குலநாயகம், மாவைக்கு எதிரான அணியில் தன்னை அடையாளப்படுத்தியவர். அவர் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவருடன் மாவையின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் முரண்பட்டனர். பதவியாசை பிடித்தவர் என நேரடியாக திட்டியதகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மிக இளம் வயது  தொடக்கம் பங்காளனாக பயணித்த மாவை சேனாதிராசா, கட்சிக்குள் அண்மையில் நுழைந்தவர்களால் மனவேதனையுடன் ஒதுக்கப்படும் நிலைமைக்குள்ளானதே அவரது உடல்நிலை வீழ்ச்சிக்கு காரணமென சொல்லப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

Казино Официальный Сайт Играть в Онлайн Казино Pin Up.8526

Пин Ап Казино Официальный Сайт - Играть в Онлайн...

Онлайн Казино Официальный Сайт в России и странах СНГ.3631

Пин Ап Онлайн Казино Официальный Сайт в России и...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்