திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நேற்று (24) தைப்பொங்கல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
உழவுத் தொழிலின் உன்னத தன்மையை பறைசாற்றும் பொருட்டு,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலான அதிகாரிகள் வயலுக்கு சென்று புதிர் எடுத்தனர்.
பூஜை நிகழ்வுகளை திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய ஆதினகர்த்தா வேதாகமமாமணி சிவஸ்ரீ. சோ. இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களின் மகன் கைலாச சங்கர குருக்கள் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.
இதன்போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்ததோடு, அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாரம்பரிய அம்சங்களை வெளிக்கொணரும் வகையில் இப் பொங்கல் விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அரச உயரதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.