சீனா, செயற்கை சூரியன் என அழைக்கப்படும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் செயல்படும் இந்த அணுக்கரு இணைவு (Nuclear Fusion) முறையை ஆராய்ச்சியாளர்கள் மின் உற்பத்தியை மாற்றிக்காட்டக்கூடியதாகக் கருதுகின்றனர்.
இன்றைய காலப்போக்கில் மின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகள் பயன்பாட்டால் மின் உற்பத்தி குறைபாடு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதை சமாளிக்க, மின்சார உற்பத்திக்கான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலைமையில், சீனா அணுக்கரு இணைவு மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அணுக்கரு இணைவு பரிசோதனை நடந்து, சுமார் 1,000 வினாடிகள் பிளாஸ்மா நிலைத்திருந்தது. இதை ‘செயற்கை சூரியன்’ எனவும் அழைக்கின்றனர்.
2023ல் இதே பரிசோதனையில் பிளாஸ்மா 403 வினாடிகள் நிலைத்திருந்த நிலையில், தற்போதைய சாதனை, ஆய்வின் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் உலகின் மின் உற்பத்தி முறையை முழுமையாக மாற்றக்கூடியதாகக் கருதப்படுகிறது.