தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் விருந்தோம்பல் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழிற்சந்தை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (23) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எம். ஹேமந்த குமார அவர்கள் தலைமை தாங்க, திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எஸ். ஏ. இபான் அவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு நடாத்தப்பட்டது.
நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் எச். ஏ. சத்தார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளனம், சர்வதேச தொழிலாளர்களுக்கான அமைப்பு மற்றும் ஜப்பானிய மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிகழ்வு நடத்தப்பட்டது.
விருந்தோம்பல் துறையில் தங்களை நிலைநிறுத்த விரும்பும் மாணவர்களுக்கு தொழிற்சந்தையின் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்டத்தின் துறைசார்ந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பயிற்சியில் சிறப்புடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட பிரதம கணக்காளர் ப. ஜெயபாஸ்கர், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களும் கலந்துகொண்டனர்.