நாடளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சந்திப்பு நாளை (ஜன.25) நடைபெறுவதாக இருந்தது. எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சந்திப்புக்கு முறைப்படியான அழைப்பு தமக்கு கிடைக்கவில்லையென தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நாளை நடைபெற திட்டமிட்டிருந்த சந்திப்பை 27ஆம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளதாகவும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு முறைப்படியான அழைப்பை இன்று (24) மாலை அனுப்பியுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்முயற்சியில் இந்த சந்திப்பு நகர்வு ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தை கையிலெடுத்தால், தமிழ் தரப்புக்கள் ஓரணியில் அதை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதலால் இந்த நகர்வில் தமிழ் அரசு கட்சி பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.