சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இது இலங்கையில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் நிறுவப்பட்டதாக அத்தியட்சகர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் புனர்வாழ்வு பிரிவின் ஒத்துழைப்புடன், கைதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது. இதில், கைதிகள் நலன்புரி சங்கத்தின் சிரேஷ்ட சிறையதிகாரி ஸ்ரீமோகன், நைட்டா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் ராஜராஜேஸ்வரன் திருமுருகன், சிறைச்சாலைகள் உளவள துணை ஆலோசகர் தர்ஷினி கோபி, மற்றும் பல சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த கணினி பயிற்சி நிலையம், கைதிகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் புனர்வாழ்விற்கு உதவும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.