இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி எம்.பிக்களின் ஓய்வறையில் இன்று பகல் இந்த சந்திப்பு நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ரிசாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார், முல்லைத்தீவு இணைப்பாளர்கள் என 14 மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்திய மீனவர்கள் அத்துமீற, சட்டவிரோத மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமது வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கடற்றொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாதுள்ளதாகவும், எதிர்க்கட்சியிலுள்ள பிரதிநிதிகளுடனேயே தம்மால் இது பற்றி பேச முடியுமென்றும் மீனவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்திய தரப்பு மற்றும் இந்த விடயத்தை பேசக்கூடிய தரப்புடன் பேசி தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரினர்.
இது தொடர்பில் அரசு, இந்திய தரப்புடன் பேச்சு நடத்த வசதியாக மீனவர் சங்கங்கள் ஒரு குழுவை அமைக்குமாறும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அந்த பேச்சுக்களை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.