யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை, இன்று (23) வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விமர்சையாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் போது ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில், முந்தைய காலங்களில் வடக்கு மாகாணத்தின் முன்னணி பொறியியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்த வேலைகள் குறித்த ஆவணங்கள் பரிந்துரை செய்யப்படாதது குறித்து கவலை தெரிவித்தார். அதேசமயம், ‘த நெயில்’ சஞ்சிகையின் வெளியீடு மூலம் பொறியியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பதிவாகி, சமுதாயத்தின் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாக இருப்பதை அவர் பாராட்டினார்.
மேலும், “சவால்களை எதிர்கொள்ளாமல் ஆளுமையை வளர்த்தல் முடியாது. சவால்களை சமாளிக்கும்போதுதான் ஆளுமையும் திறமைகளும் விருத்தி பெறும். அனுபவங்கள் எழுத்துமூல போதனையை விட பரந்துகொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும்,” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கும், அறிவியல் அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள இச்சஞ்சிகை, புத்தகக் கல்விக்குப் புறம்பாக நடைமுறை அனுபவங்கள் மற்றும் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளதைக் குறிப்பிடத்தக்கதாகவும் அவர் கூறினார்.
இந்த சஞ்சிகை வெளிப்பாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் சமூகத்திற்கான நன்மைகளுக்கும் முக்கிய பங்காற்றுவதாக அமையும் என எல்லோராலும் வரவேற்கப்பட்டது.