வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வெள்ளம் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் திறந்திருப்பதால், பல வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிந்துள்ளன. விவசாயிகள் அறுவடை செய்ய ஆயத்தமாக வைத்திருந்த வயல்களும், முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் பொருளாதாரத்தை மிகுந்த அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த விவசாயிகளுக்கு சரியான நஷ்டஈடு வழங்குவதற்கும், மீள உற்பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதனுடன், “கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்” குறித்து உரையாற்றிய அவர், இந்த திட்டம் சிறப்பாக செயற்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பெரிய நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில், இதுபோன்ற வேலைத்திட்டங்கள் இடைக்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அதுபோன்று, இலங்கையிலும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவான நிவாரணமும், நஷ்டஈடும் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஹிஸ்புல்லாஹ் அவரது உரையில் வலியுறுத்தினார்.