கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த 32 வயது, இரு பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் ஒருவர், கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப் பெண் தன்னைத் தானே அணிந்திருந்த உடையை கழற்றி தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, அவர் சட்டவிரோத விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்தப் பெண் வீதியில் நின்றபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸாரின் விளக்கங்கள் முற்றிலும் எதிர்மறையானது என பல தரப்பினரும் விமர்சிக்கின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் மருதானை பொலிஸ் நிலையத்தில் முன்னணிப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் உடனடி விசாரணைகளை கோரியுள்ளார். மருதானை பொலிஸ் நிலையத்தில் இருந்த பெண்ணின் மரணம் குறித்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது, பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உண்மையை கண்டறிய அதிகாரிகளை கோரியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவரால் தற்கொலை செய்வது எவ்வாறு சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பியதோடு, இது கொலையாக இருக்கலாம் எனவும், சம்பவம் தொடர்பாக சரியான விசாரணை மேற்கொண்டு, அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், இலங்கையின் பொலிஸ் துறையின் செயற்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வதேச நீதி அமைப்புகளும் இதுபோன்ற சம்பவங்களில் பொலிஸாரின் செயற்பாடுகளைப் பலமுறை கண்டித்துள்ள நிலையில், இப்பெண்ணின் மரணம் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் உள்ளதாக பல தரப்பும் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது