மீனவ பிரதிநிதியாக விளங்கும் அன்னராசா, வர்ணகுலசிங்கம் ஆகியோர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்திய தூதுவர் தலைமையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம் பெற்ற நாற்பது மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வு தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வலைகளை பெற்றுக் கொண்ட 40 பயனாளிகளில் அதிகமானவர்கள் வடக்குமாகாண மீனவ பிரதிநிதிகளான அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கத்தின் உறவினர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
வலைகளை பெற்றுக் கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்றும் தமது உறவினர்களுடைய பெயர்களை பரிந்துரை செய்து வலைகளை பெற்றுப் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கம் இதற்கு விளக்கமளிக்க வேண்டுமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
மீனவ பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் இவர்கள் உரிய பயனாளிகளை தெரிவு செய்யாமல் தமது உறவினர்களுக்கு மட்டும் வலைகளை வாங்கிக் கொடுத்தது சரியான முன்னுதாரணமான செயற்பாடா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்
சம்பவம் தொடர்பாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொருளாளரிடம் வினவிய போது, யாழ் இந்திய தூதுவரால் பயனாளிகளுக்கு வலைகள் கொடுப்பது தமக்கோ, நீரியல்வளத் திணைக்கள அதிகாரிக்கோ எதுவும் தெரியாதென தெரிவித்த அவர் உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கத்தின் உறவினர்களுக்கே அதிகமாக வலைகள் கொடுக்கப்பட்டது உண்மை என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்
மீனவ பிரதி நிதிகளின் குறித்த செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன