யாழ் மாவட்டத்தின் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இம்முறைகள் மீன் வளத்தை மட்டுமல்ல, கடல் சூழலையும் அழிக்கும் தன்மையுடையவை. எதிர்கால சந்ததிகளுக்கான வளங்களை பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் இது தொடர்பில் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடற்படை, கரையோர காவல் படை, இராணுவம், விமானப்படை, விசேட அதிரடிப்படை, மற்றும் பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும், கைதானவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தக்க தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளாக, தங்கூசி வலைகள் பயன்படுத்துதல் (புரியாஸ் உட்பட தங்கூசி வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்தல்), இயந்திரமயமாக்கப்பட்ட கடல் அடித்தள இழுவைமடி (Bottom Trawler), அனுமதியற்ற இறால்கூடுகள் பயன்படுத்துதல், அனுமதிப்பத்திரம் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகள் (செல்லுபடியான அனுமதிப்பத்திரம் அல்லது அதன் நிபந்தனைகளை மீறல்), பதிவு செய்யப்படாத அல்லது பதிவு புதுப்பிக்காத படகுகளை பயன்படுத்துதல், படகில் உரிய பதிவுகளை தவறுதல், புள்ளிச் கறா, தம்புவ மீன், கடல் ஆமை, கடல்வாழ் முலையூட்டிகள், மற்றும் (பெப்பிரவரி, செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்கள்) சிங்க இறால் , முருகைக்கல் பாறைகளில் சுருக்குவலை மற்றும் செவுள் வலை பயன்படுத்துதல், ஈட்டியால் குற்றி மீன்களை பிடித்தல், டைனமைட், வெடி பொருட்கள், அல்லது உணர்ச்சி இழக்கச்செய்யும் பொருட்கள் பயன்படுத்துதல், கல்வனைஸ் பைப் பயன்படுத்தி களங்கண்டி/சிறகு வலைகள் உருவாக்குதல், கண்டல் தாவரங்களை வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையின் கீழ் கைது செய்யப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறைகள் மூலம் மீன் வளத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்களும் இந்த சட்டத்தை மதித்து செயல்படுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், தங்களது மீனவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில்களில் ஈடுபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள், யாழ் மாவட்டத்தில் மீன் வளத்தை பாதுகாத்து, கடல் வளத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.