திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபை பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி பாலம், சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய மார்க்கமாக விளங்குகிறது. இதன் மீள நிர்மாணத்திற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை மற்றும் பதுளை செங்கலடி வீதியின் புனரமைப்பு வேலைகளுக்காக முன்பு ஒதுக்கப்பட்ட பணத்தொகையின் மீதியிருக்கும் தொகை, குறிஞ்சாக்கேணி பாலத்திற்காக திருப்பி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிஞ்சாக்கேணி பாலத்தின் மீள நிர்மாணப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதிநயத்தின் சட்டப் பணிப்பாளர் அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
பாலத்தின் நிர்மாணம் முடிவுக்கு வந்தால், கிண்ணியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இப்பாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த திட்டம், சவூதி அபிவிருத்தி நிதியுடன் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு முக்கியமான வளர்ச்சித் திட்டமாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.