இலங்கையின் சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளோரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் திகதி வவுனியாவில் ஆரம்பமாகிய இந்த மாபெரும் போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் ஆதரவை பெற்று, 2025 ஜனவரி 20ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் நிறைவு பெற்றது.
போராட்டத்தின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து கையெழுத்துகளும் விரைவில் இலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்படும். அதனடிப்படையில், வரவிருக்கும் சுதந்திர தினத்தையோ அல்லது சித்திரை புத்தாண்டையோ முன்னிட்டு பொது மன்னிப்பு அறிவித்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது என போராளிகள் நலன்புரிச்சங்க ஊடக பேச்சாளர் செல்வரட்ணம் தனுபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நீதி நிலைநாட்டப்படும் என போராளிகள் நலன்புரி சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்ட சமூக நீதிக்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.