இந்தியாவின் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது சானேகா (வயது 35), தனது 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது சானேகா, மாணவியுடன் நெருங்கிப் பழகி, மாலை வீட்டுக்குச் சென்றபின் வீடியோ காலில் பேச வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மாணவி இதற்கு மறுப்புத் தெரிவித்தபோது, தேர்வில் மதிப்பெண்களை குறைத்து வழங்குவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, ஆசிரியரின் கட்டாயத்திற்கிணங்க வீடியோ கால் செய்துள்ளார்.
வீடியோ அழைப்பில், “குளிக்கும் போது வீடியோ கால் பண்ணு” என ஆபாசமாகப் பேசியதாகவும் குறித்த ஆசிரியர் தொல்லை கொடுத்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பெற்றோரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, உயிர் பாதுகாக்கப்பட்டது. பின்னர் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தமக்குக் கிட்டிய தொல்லைகளைப் பற்றி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாணவியின் பெற்றோர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முகமது சானேகாவை கைது செய்துள்ளனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.