திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டம் கடந்த 17.01.2025 அன்று முற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா , பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக சண்முகம் குகதாசன் அவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளதும் 1995 ஆம் வருடத்தில் சின்னதம்பி தியாகராசா என்பவரால் மூதூர் இந்து இளைஞர் மன்றத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுமான அரை ஏக்கர் நிலத்தை தனிநபர் அத்துமீறி பிடித்துள்ளார். அக்காணி இந்து இளைஞர் மன்றத்திடம் மீள ஒப்படைக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
விவசாய குளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனும் பெயரில், கங்குவேலிக்குளம், மேன்காமக்குளம் மற்றும் கிளிவெட்டிக்குளங்களில் அத்துமீறி விவசாயம் செய்பவர்களை வெளியேற்றி உரிய விவசாயிகள் பயன்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டது.
64ம் கட்டை பிள்ளையார் கோயிலை மறுசீரமைப்பில் உள்ள சிக்கல்களை தீர்த்து கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஆவன செய்யுமாறும், மேன்காமக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் மற்றும் மூதூரின் நெற்சந்தைப்படுத்தும் நிலையத்தை இராணுவம் மற்றும் காவல்துறை கையகப்படுத்தியுள்ளதை விடுவித்து, அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள சீதனவெளி ஆடைத் தொழிற்சாலையை மீள செயற்படுத்துவதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் கடற்கரைச்சேனை பிரிவில் தோட்டப் பயிர்செய்கையில் ஈடுபடும் 14 குடும்பங்களுக்கு மின் இணைப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இக் கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளிக்குடியிருப்பு பகுதியில் குடிநீர் இணைப்பில்லாத சின்னக்குளம், இத்திக்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு உடனடி தீர்வு காணுமாறும் இதன்போது கோரப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தின் மூலம் மூதூர் பிரதேசத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் வெளிச்சமிடப்பட்டதுடன், அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் முன்மொழியப்பட்டன. பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ஆவன செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.