பெற்றோர் நிச்சயித்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண் குற்றவாளி என நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு திங்கள் கிழமை தண்டனை அறிவிக்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3ஆம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார்.
காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா யோசித்தார். ஆனால் இருவரும் உல்லாசமாக இருந்த போட்டோ, வீடியோக்கள் காதலனிடம் இருந்தன. அவற்றை ராணுவ மாப்பிள்ளைக்கு காண்பித்து, திருமணத்தை நிறுத்தி விடுவாரோ என்றும் யோசித்தார். இதனால், ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. கிருமிநாசினியை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார்.
இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.
ஓராண்டு சிறையில் இருந்த கரீஸ்மா ஜாமினில் வெளியேவந்தார். கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கரீஸ்மா கொலை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். கரீஸ்மாவின் மாமாதான் கிருமிநாசினியை வாங்கிக் கொடுத்தார். அவரும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. இருவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டமு.
இன்று நீதிமன்றத்தில் கரீஸ்மா ஏதாவது சொல்ல விரும்புகிறாரா என கேட்ட போது, அவர் ஒரு கடிதத்தை ஒப்படைத்தார்.
அதில், தனக்கு 24 வயதுதான் ஆகிறது, உயர்கல்வி கற்க விரும்புகிறேன், பெற்றோருக்கு ஒரே பிள்ளையென்பதால், தண்டனையை குறைத்து வழங்குமாறு மன்றாட்டமாக கேட்டிருந்தார்.
எனினும் அரசு தரப்பு அதை ஆட்சேபித்தது. கரீஸ்மாவின் நடத்தை பிசாசின் நடத்தைக்கு ஒப்பானது என வர்ணித்து, அவருக்கு மரணதண்டனை கோரியது. நேசித்த காதலனை திட்டமிட்டு கொல்ல கொடூர மனம் தேவையென்றும், தனது நடத்தைக்காக அவர் வருந்தவில்லையென்றும், காதலன் மருத்துவமனையில் எவ்வளவு வலியை அனுபவித்து மரணித்தார் என்பதை மருத்துவ அறிக்கைகள் விளக்குகிறது என்றும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, தீர்ப்பை திங்கள் அறிவிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.




