பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவர்களிடையே மோதலின் காரணமாக, பொதுமாணவர் சங்கம் மற்றும் பீட மாணவர் சங்கங்களின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்த பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரியாவிடை விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில், இரண்டு மாணவர்கள் காயமடைந்ததன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் பேராதனை மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை பெற்றனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15ம் திகதி இரவு, மேலும் மோதல்களுக்கு மாணவர்கள் தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பையும், எதிர்வரும் தேர்வுகள் காலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.