தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுவன் தினேஷ் ஹம்சின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்க பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி விசாரிக்கப்படுகையில், குடும்பத் தகராறில் சிக்கிய தாய், தனது நான்கு வயது மகனுடன் தற்கொலை செய்யும் நோக்கில் நேற்று (16) மாலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்ததாக தெரியவந்தது. அதன்போது, தாயை மீட்டு லிந்துலை வைத்தியசாலைக்கு அனுமதித்தனர். ஆனால் சிறுவன் காணாமல் போயிருந்தார்.
41 வயதான குறித்த பெண், தனது கணவரை பிரிந்து பூண்டுலோயா பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் வாழ்ந்து வந்தார். அந்த நபர் மற்றுமொரு திருமணம் செய்ய திட்டமிட்டதனால், ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக இத்தகைய முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம், மரண விசாரணைகளுக்குப் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.