பழ.நெடுமாறன் வெளிநாடு செல்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணம் ஏற்கும்படி இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர கோரிய அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் புதுப்பித்து தருமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பித்தை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நிராகரித்து வி்ட்டார். எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, ‘‘முன்னாள் எம்எல்ஏவான பழ.நெடுமாறனுக்கு எதிராக காவல் துறை அளித்த அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் புதுப்பித்து தரப்படவில்லை என காரணம் கூறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை எங்களுக்கு தர பாஸ்போர்ட் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, பாஸ்போர்ட் புதுப்பித்து தருவதை மறுக்க முடியாது’’ என்று வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேசன், ‘‘தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் தற்போது உயிருடன் இருப்பதாகவும், தமிழக மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்குமாறும் பழ.நெடுமாறன் பேசியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. இது இலங்கை உடனான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும். போலீஸார் தரும் தடையில்லா சான்றின் அடிப்படையிலேயே பாஸ்போர்ட் வழங்கவோ, புதுப்பித்து தரவோ முடியும். மனுதாரரின் வெளிநாட்டு பயணத்தால் வெளிநாடுகள் உடனான நமது நட்புறவுக்கு தீங்கு ஏற்படும் என பாஸ்போர்ட் அதிகாரி கருதினாலும், சம்பந்தப்பட்ட நபரது விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது’’ என்றார்.
ஆனால், மத்திய அரசின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். ‘‘மனுதாரர் வெளிநாடு செல்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பாஸ்போர்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பழ.நெடுமாறன் இதுதொடர்பாக 2 வாரங்களில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். விளக்கம் பெற்ற 3 வாரங்களில், அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி்க்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.