மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக வனவளத் திணைக்களம் விடுவிக்க வேண்டும் என நேற்றைய தினம் (15.01.2025) இடம்பெற்ற மன்னார் – முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முசலி பிரதேசசெயலகப்பிரிவில் பெருமளவான மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராமமட்ட பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் வனவளத் திணைக்களத்திடமிருந்து 3,510 ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1,110 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டு தரப்படவேண்டும் என முசலி பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் காணி உரிமையாளர்களின் அறிவுமிக இல்லாமல், வனஇலாகா தமது எல்லைக்கற்களை எடுத்து மக்களின் காணிகளை அபகரித்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்து தெரிவித்ததோடு, வனவளத்திணைக்களம் எனும் அமைப்பு, மக்களின் காணிகளை களவாடுவதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது” என்றும் அவர் கண்டித்தார்.
இதனை தொடர்ந்து, முசலிப் பிரதேச செயலாளர், இடப்பெயர்வுக்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள், இடப்பெயர்விற்கு பிறகு வனஇலாகா கையகப்படுத்தியுள்ளன. இதனால், எதிர்காலத்தில் மக்களின் குடியிருப்பு, விவசாய தேவைகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கான தேவை காரணமாக, மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் மூலம் இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
அந்தவகையில், முசலி பிரதேசசெயலர் பிரிவில் வன இலாகாவிடமிருந்து 3510 ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110 ஏக்கர் காணிகளும் உரிய முறையில் களவிஜயம் செய்து, அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு காணிகளை விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் பேசி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் முசலிப் பிரதேச செயலாளர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.