யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு சிகிச்சை விடுதிகள் (14 மற்றும் 17) தற்போது நவீன வசதிகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளன.
முன்னதாக வைத்தியசாலையின் நுழைவாயில் 6 முன்புறத்தில் செயல்பட்டு வந்த இந்த விடுதிகள், தற்போது மேலதிக வசதிகளுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து நோயாளிகளுக்கும் தேவையான மருத்துவ உபகரணங்கள், தனிப்பட்ட பராமரிப்பு, மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், வைத்தியசாலையின் நுழைவாயில் 2ஏ வழியாக நுழைந்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் வலதுபுறத்தில் உள்ள மின்தூக்கி மூலம் 3ம் மாடிக்கு சென்று நோயாளிகளை பார்வையிடலாம்.
நோயாளிகளை பார்வையிட ஒரு நேரத்தில் ஒருவருக்கு இருவர் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த நடைமுறையை பின்பற்றும்படியும், புதிய விடுதிகளின் வசதிகளைப் பயன்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாற்றம் நோயாளிகளின் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.