திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், பக்தி இலக்கியம், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் பற்றி பெரியார் கூறிய கருத்துகளே இதற்கான ஆதாரம். அவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். எந்த மொழியில் அவர் அதைக் கூறினார். நாங்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் போதவில்லையென்றால், இன்னும் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.
உலகத்தில் எல்லா தேசிய இயக்கத்துக்கும் மொழிதான் முக்கியமானது. தமிழ் மொழியைப் பற்றி தவறாகக் கூறியபோதே பெரியாரின் கொள்கை, கோட்பாடுகள் சரிந்துவிட்டன. வள்ளலார், வைகுந்தரை தாண்டி அவர் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? நான் மாறி மாறிப் பேசவில்லை. ஒவ்வொன்றாகப் படிக்கும்போதுதான் தெளிவு ஏற்படுகிறது.
திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. மண்ணின் விடுதலைக்காக தனது சொத்தை விற்றவர் வஉசி. ஆனால், சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார். என்னிடம் சான்று கேட்டும் பெரியார் இயக்கத்தினர், பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக என்ன போராட்டம் நடத்தினார்கள்? ஆளுநருடன் டீ குடிக்கிறீர்கள், எதிர்த்துப் போராட்டமும் நடத்துகிறீர்கள். காலையில் மகனும், மாலையில் தந்தையும் பிரதமரை சந்தித்தது மாநில வளர்ச்சிக்கா?
குஜராத் மீனவர்களை கைது செய்தபோது, கடற்படையினர் விரட்டிச் சென்று அவர்களை மீட்டுள்ளனர். ஆனால், தமிழகம், புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ச்சத்தீவை மீட்பதுதான். நான் அதிகாரத்துக்கு வந்தால், தமிழக மீனவர்கள் மீது யாராலும் கைவைக்க முடியாது.
திராவிடம் என்ற சொல் எந்த மொழியில் உள்ளது? திராவிடம் என்ற சொல் இருப்பதால்தான், நான் தமிழத்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து, பாரதிதாசனின் ‘வாழ்வினில் செம்மையும்’ பாடலை தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பயன்படுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் கைது: தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பெரியார் குறித்து சீமான்பேசியது தொடர்பாக, அவரது வீட்டுக்குச் சென்று ஆதாரம் கேட்கப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும், தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதரவாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சீமான் வீட்டை முற்றுகையிடப் புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். பெரியார் குறித்து கூறிய கருத்தை சீமான் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சீமான் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி தென் சென்னை மாவட்ட நிர்வாகி நன்மங்கலம் சசிகுமார் (41) என்பவர், மகனின் காதணி விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நேற்று காலை சீமான் வீட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது, அவரது காரை முற்றுகையிட்ட தபெதிகவினர், கார் மீது கற்களை வீசினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.