கோமாரியில் மூன்று சக்கர சைக்கிளில் பயணித்த மாற்றுத் திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது இயலாத நிலையிலும் சிறு தொழிலில் தன்னை நிலைநிறுத்தி வாழ்ந்த இந்த மாற்றுத் திறனாளியின் மரணம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்து இன்று (09.01.2025) காலை 6 மணியளவில் பொத்துவிலுக்கு அருகிலுள்ள கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் கோமாரியைச் சேர்ந்த 71 வயதான மென்டிஸ் அப்பு விஜயஸ்ரீ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பல வருடங்களாக கோமாரி மகா வித்தியாலயத்துக்கும் தபாலகத்திற்கும் இடையில் உள்ள மரத்தின் கீழ் தனது மூன்று சக்கர சைக்கிளில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இரண்டு கால்களும் இயங்காத நிலையிலும், தன்னைப்பற்றி நினைத்து உழைத்த அவரின் இழப்பு சமூகத்தில் பெரும் எதிரொலியைக் கொண்டுள்ளது.
சம்பவத்தன்று, தனது சைக்கிளில் வீதியில் இருந்த கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு வீடு திரும்பிய வேளையில், பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய அதிர்ச்சியில் அவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொத்துவில் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தனர். விபத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.