LB Finance கிளையில் நகை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில், அடிமட்ட ஊழியர்கள் மருதங்கேணி பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை பல தரப்பினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 02.01.2025 அன்று, மருதங்கேணி LB Finance கிளையின் முகாமையாளருக்கு, அடகு வைக்கப்பட்ட நகைகள் சில களவாகியுள்ளதாக தெரியவந்தது. இதற்கிடையே, ஆறு நாட்கள் தாமதமான பின்னரே, 08.01.2025 அன்று, பொலிஸாரிடம் எந்த முறையான முறைப்பாடுகளுமின்றி வாய்மூலமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வாய்மூல தகவலுக்குப்பின், மருதங்கேணி பொலிஸார் கிளைக்கு வருகை தந்து, வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த அடிமட்ட ஊழியர்களை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபா 2,250,000/- எனவும், ஐந்து ஊழியர்களிடமும் ஒவ்வொருவரும் ரூபா 450,000/- வழங்க வேண்டும் என கோரியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு ஊழியரின் தொலைபேசி மற்றும் ஐவரின் தேசிய அடையாள அட்டைகள் பொலிஸார் பெற்று சென்றனர். இன்றையதினம் (09.01.2025), பணம் வழங்காத காரணத்தால், குறித்த ஐந்து ஊழியர்களை (நான்கு பெண்கள் உட்பட) பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லாமலே பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்று, காலை 11.30 மணிமுதல் இரவு 07.00 மணிவரை விசாரணை செய்து விடுவித்தனர்.
விசாரணையின் போது, பொலிஸார் நாளை காலை 11.00 மணிக்குள் பணம் வழங்குங்கள், இல்லை என்றால், கே.கே.எஸ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்று மிரட்டியதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், CCTV மூலம் களவாடியவரை கண்டுபிடிக்க முடியாது; முதலில் பணம் கொடுங்கள், பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் அவதானிக்கப்படுகிறது. முறைப்பாடுகள் இல்லாமலே தனிநபர் விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும், மேல்மட்ட முகாமையாளர்கள் தொடர்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் CCTV காட்சிகளை உடனடியாக பரிசோதிக்க அலட்சியம் காட்டப்பட்டதாகவும் குற்றச்சுமத்தப்பட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
வங்கி கிளையின் முகாமையாளரும் பிராந்திய மேலாளரும், நாங்கள் முறைப்பாடு செய்யவில்லை; மேலதிக தகவலுக்கு பொலிஸாரிடம் கேளுங்கள் என கூறி, மேலதிக விளக்கங்களை மறுத்துள்ளனர். தங்கள் மீது எந்த முறைப்பாடுகளுமின்றி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாகவும், போலியான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நோக்கம் நிரப்புவது மட்டும் சாத்தியமில்லை என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். சரியான வழிகளில் சட்டத்தின் மூலம் தீர்வு காண தயார், எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முடிவில், ஊழியர்களின் நிலைமை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.