தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சையரிசி மற்றும் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. எஸ். இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (08.01.2025) உரையாற்றுகையில், ”அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது. தற்போதைய நிலைமையில் ஒரு கிலோ பச்சையரிசி ரூ.280-290 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் சிரமமாக உள்ளது,” என்றார்.
“பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு கண்டிக்கத்தக்கது. ஆகவே, இந்த பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், நாடு முழுவதும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் “துப்பாக்கிச் சூட்டுகள் மற்றும் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இது மக்கள் பாதுகாப்பை பாதிக்கின்றன. மக்கள் அமைதி மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு விரைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, “கிளீன் ஸ்ரீலங்கா” என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நடைபாதை வியாபாரிகள், பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கின்றன. இதனால், வர்த்தகர்கள் பொருளாதார சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே, இந்த திட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
“நாட்டில் சமாதானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தைரியம் கொள்வார்கள்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொங்கல் பண்டிகை அருகே வரும் நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.