பிரதேச செயலகங்களின் ஊடாக வசூலிக்கப்படும் வாகன வரி கட்டணங்களின் ஒரு பகுதியை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கோரிக்கை விடுத்தார்.
வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், மயானங்கள், நூலகங்கள், மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றுதல் போன்ற சேவைகளை உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு வழங்குகின்றன எனவும் பணிகளை வினைத்திறன் மிக்கதாக முன்னெடுக்க வரி ஆதரவு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிடட இவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், மாட்டு வண்டி மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கான வரி போன்ற பழைய வருவாய் ஆதாரங்கள் இனி கிடைக்கவில்லையெனவும், தற்போது உள்ள முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் சொத்து வரிகள் மட்டுமே உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய வருவாய் வழிகள் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிரதேச செயலகங்களின் ஊடாக அறவீடு செய்யப்படும் வாகன வருமான வரி கட்டணங்களினை பங்கீட்டு வரி பட்டியலில் இணைத்து அதில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கினால் அதனுடைய சேவைகளினை வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்ல முடியுமெனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்றத் தலைவர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள நிர்வாக சிக்கல்களையும் ஆளணி தட்டுப்பாட்டையும் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.