97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்றைய தினம் (08.01.2025) கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக 66 வயதான பொஸ்னியா பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து பிடிபட்டார். அவரின் பயணப்பெட்டிக்குள் கால்களை சுத்தம் செய்ய பயன்படும் 114 பிரஷ்களுக்குள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.759 கிலோ கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கைது செய்யப்பட்டவர் கொலம்பியாவில் இருந்து பயணிக்கத் தொடங்கி, கட்டாரின் டோஹா நகரம் வழியாக QR-662 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 02:40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைதான நபரும் போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.