சீன வைரஸ் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (09.01.2025) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். இதற்கமைய, தொற்றுநோயியல் பிரிவு சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகவும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, சுகாதார மேம்பாட்டு பணியகம் சமீபத்தில் இதுதொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையின் முக்கியத் தகவல்களாக சீனாவின் வடக்கு பகுதிகளில் சுவாச நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுவான சுவாச வைரஸ்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என சீன சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த வைரஸ்கள், இன்ஃப்ளூவென்ஸா, சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் கண்டறியப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்த நிலைமை எதிர்பாராதது அல்ல என்றும், மற்ற நாடுகளில் காணப்படும் சுவாச நோய்களுடன் ஒத்துப்போகும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை எந்த விதமான வைரஸ் பரவலின் அறிகுறிகளும் ஏற்படவில்லை எனவும், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந் நிலையை கண்காணித்து வருவதோடு, உலகளாவிய சுகாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.