28 வயதுடைய முன்பள்ளி ஆசிரியை ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது கணவனை மிரட்ட, கைபேசி நேரலையில்- தூக்கில் தொங்கப்போவதாக குறிப்பிட்டு, விளையாட்டாக கழுத்தில் கயிற்றை மாட்டிய போது, துரதிஸ்டவசமாக கயிறு இறுகி உயிரிழந்துள்ளார்.
அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த அனுத்தரா சிறிமான்ன என்ற 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
அனுத்தராவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது கணவர் கொரியாவில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது வீட்டில் வசித்து வரும் நிலையில், தனது கணவரின் உதவியுடன் அந்த வீட்டின் பின்புறம் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியுள்ளார்.
அந்த புது வீட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி சுப தருணத்தில் குடிபுகவிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கணவரும் கலந்து கொள்ளவிருந்தார்.
கடந்த சனிக்கிழமை, அனுத்தரா, புதிய வீட்டிலிருந்து தொலைபேசியில் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது, சிறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவரை மிரட்ட- தனது அறையில் ஒரு படுக்கையில் ஒரு நாற்காலியை வைத்து, அதன் மீது ஏறி, கழுத்தில் துணிணை கட்டி, கூரையில் தொங்கவிட முயன்றார். இந்த சம்பவங்களை தனது கணவர் பார்க்கும் வகையில் வீடியோ போனை பின்னணியில் இயக்கி வைத்துள்ளார்.
இதன்போது, கட்டிலில் இருந்த கதிரை தவறுதலாக தட்டுப்பட்டு கீழே விழ, அனுத்தராவின் கழுத்தில் துணி இறுகியது.
பதற்றமடைந்த கணவர், வீட்டில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து, மனைவி தூக்கிலிடப் போவதாக கூறி, தடுக்க முயன்றார். எனினும், வீட்டின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவர் நின்றிருந்த நாற்காலி கவிழ்ந்து, கழுத்து நெரிக்கப்பட்டு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுத்தரா, ஹிம்புட்டானாவில் உள்ள முன்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அmனுத்தராவின் இறுதிக் கிரியைகள் இன்று (08) மாலை உடுமுல்லை மயானத்தில் இடம்பெறவுள்ளன.