கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் மற்றும் வினைத்திறன் கொண்டதாக்கும் செயற்றிட்டங்கள் இன்று (07.01.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, சுற்றுச்சூழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் சுத்தம் செய்யும் பணிகள், பாரம்பரிய மற்றும் பரம்பரைச் சின்னங்களை புதுப்பித்தல், மற்றும் நகரத்தின் முக்கிய இடங்களில் ஒளி அலங்காரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு. என். தனஞ்செயன் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வின் முக்கிய பிரமுகர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா வளங்களை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுலா வசதிகளையும் உறுதிசெய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நவீன உள்கட்டமைப்புகள், சுற்றுலா மையங்கள் மற்றும் வழிகாட்டி சேவைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பின் சுற்றுலா வளங்களை சர்வதேச ரீதியில் பிரபலமாக்கவும், சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கவும் இந்த முயற்சிகள் ஒரு முக்கிய கட்டமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.