ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று (6) திங்கள் இரவு மேற்கொள்ளப்பட்டது.
கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் பிரதேச மில்லர் விளையாட்டுக் கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 100 லீற்றர் கசிப்பு,30 லீற்றர் கோடா,10 வெற்று பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அவற்றினை பொதுமக்கள் முன்னிலையில் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட காலமாக கிண்ணையடி கிராமத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றினை அண்மித்த பிரதேசங்களில் இவ் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கை இடம்பெற்று வந்தது. இதனை தடுக்க எவரும் துணிந்து முன்வராத நிலைமை காணப்பட்டது.
இதனால் பிரதேசத்தில் கலாச்சார சீரழிவு, இளைஞர்கள் போதைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, வாழ்வாதாரம் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு விடயங்களால் பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். அத்துடன் கசிப்பு விற்பனை நடவடிக்கை இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாப்பித்திருந்தது.
இதனை கவனத்தில் கொண்டு அதனை முற்றகாக ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது மேற்படி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மட்டும் இதனை ஒழிக்க முடியாத நிலை உள்ளதால் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மில்லர் விளையாட்டு கழகத்தின் தலைவர் வ.வன்னியசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதேவேளை இவ் நடவடிக்கையின்போது தனக்கோ அல்லது ஏனையோர்களுக்கோ ஏதும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றால் பொலிசார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
-க.ருத்திரன்-