யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீளவும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இந்தச் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்த நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.
ஆனாலும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
மாற்றம் என கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசு, ஒருபுறம் சோதனைச் சாவடிகளை அகற்றிய பின்னரும், மறுபுறம் மீண்டும் அதே இடத்தில் சாவடிகளை அமைப்பதன் மூலம் பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளமை அறியக்கூடியதாகவுள்ளது.
அரசின் இந்த மாற்றமில்லா நடவடிக்கைகள், பொதுமக்களில் நம்பிக்கையின்மையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீண்ட காலமாக பருத்தித்துறையில் இயங்கிவரும் இராணுவ முகாமை அகற்றுவதாக அரசின் உறுதி இருந்தபோதிலும், அதில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படாதது மக்களின் எதிர்பார்ப்புகளை தளர்த்தியுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன,