மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டங்களில் அரசியல் தலையீடு மற்றும் சட்ட மீறல்களால் மக்கள் நலனுக்கான திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் இரவி ஆனந்தராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டங்கள் பொதுமக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படவேண்டிய நிலைமையில், தற்போதைய நடைமுறைகளால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களை தங்களது அரசியல் வாதங்களுக்கான மேடையாக பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். “சில உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளின் செயல்களை குறைத்து, தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்துகிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பல மாவட்டங்களில் சமீப காலங்களில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டங்களில் பல குறைபாடுகள் வெளிப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்கள் அரசியல் சாயம் பெற்ற செயல்பாடுகளின் காரணமாக விமர்சனத்திற்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு மீறிய செயல்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கிறார்கள், DCC கூட்டங்களின் போது வீடியோக்களை பதிவு செய்தோ, Live இலோ பதிவேற்றுகிறார்கள். இவை தகுந்த செயற்பாடுகள் அல்ல என்று தெரித்துள்ள இரவி ஆனந்தராஜா, இதற்கான பரிந்துரைகளாக பல விடயங்களை முன்வைத்துள்ளார்.
அந்தவகையில், ஆளுநர் அல்லது அரசாங்க அதிபர் கூட்டத்திற்கு தலைமை வகிக்க வேண்டும் என்றும் MPக்கள் கூட்டங்களை அரசியல் மேடையாக மாற்றுவதைத் தடுக்க, புதிய நடைமுறைகள் அமுல்படுத்த வேண்டும் என்றும் MPக்கள் சட்ட மீறல்களை நிறுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் என்றும், DCC கூட்டங்களின் விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது என்றும் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.