சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் “பதக்கம்” சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
“நாம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வாக, சர்வசன அதிகாரம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. உணவு பாதுகாப்பு, மின்சக்தி, மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களை நாம் தெளிவாக பரிசீலித்து வருகிறோம். இந்த சிக்கல்களை சமாளிக்க சர்வசன அதிகாரம் எப்படி முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், எவ்வாறு தீர்வுகளை முன்னேற்படுத்த வேண்டும் எனவும் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த முறை மாகாண சபை தேர்தலில் பதக்கம் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம். முக்கியமாக, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே முதன்மையானது. அதேபோல் உள்ளூராட்சி தேர்தலிலும் போட்டியிட சர்வசன அதிகாரம் முடிவு செய்துள்ளது. இத்தேர்தல்களில் வெற்றி பெறுவதும் அவசியமாகும்.
எனவே, எங்களின் அரசியல் கொள்கைகளை நம்பும் அனைவரையும், எங்களுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கின்றோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.