யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, காரணமேயில்லாமல் இரண்டு இளைஞர்களை கடுமையாக தாக்கிய சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று ரௌடிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது.
அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் வீதியை வழிமறித்து முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டினர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களை காரணமேயில்லாமல் வழிமறித்து கடுமையாக தாக்கியிருந்தனர்.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மற்றொருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகிறார்கள்.
இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், காணொளியை அடிப்படையாக கொண்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, சந்தேகநபர்களை கைது செய்யுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கும், யாழ்ப்பாண பொலிசாருக்கும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.