Pagetamil
ஆன்மிகம்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மீனம்: கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்! உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்ற நிலை மாறும். இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது ஏற்பட்ட கோபநிலை மாறி இனி அனைவரையும் அரவணைத்துப் போவீர்கள். தள்ளிக் கொண்டே போன மகனின் திருமணம் இப்போது கூடி வரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை ராசிக்கு 7இல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்து செல்லும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண் டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ஆம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.

கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்த – பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 4ஆம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்றவற்றை சரி பார்த்து வாங்குங்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விரயச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 29.03.2025 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். வறட்டு கவுரவத்துக்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

வியாபாரிகளே! சரக்குகளை நிரப்பி வைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னீச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தந்த நிலை மாறும். இனி அவர்கள் உங்களிடம் பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கணினி துறையினரே! வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களே! எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இதுவரை இருந்தது. இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். பழைய பிரச்சினைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்கள் என்பதை அறிந்து அதற்கு முடிவு கட்டுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும்.

இந்த 2025 ஆம் வருடம் உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பாலாம்பிகையை வணங்குங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். ஆதரவற்ற பெண்ணுக்கு உதவுங்கள். அனைத்திலும் வெற்றி கிட்டும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment