இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது புதிய வியாபார மாஃபியாவாக மாறிவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் பெரிதும் பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பெற்றோர்கள் தங்களின் வருமானத்தின் 60 சதவீதத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிக்கின்றனர். இது பொதுவாக தனியார் வகுப்புக்களுக்கு செலவாகும். கல்வியை விற்பனை பொருளாக மாற்றியுள்ள இந்த தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கின்றன.
“தனியார் வகுப்புக்களை நம்பாமல் பாடசாலை கல்வியை மட்டுமே நம்பியும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உருவாக்க வேண்டும்” என ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.