மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் ஒன்றுகூடி, தங்கள் கடமைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள அனுமதி கோரியும், சமீபத்தில் நடந்த தாக்குதல்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் நாசிவன்தீவு பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தாக்குதலுக்கு உள்ளாகியதை தொடர்ந்து, தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தின் தியாவட்டவான் பகுதியில் உள்ள மற்றொரு கிராம உத்தியோகத்தர் மீதும் சமீபத்தில் தாக்குதல் நிகழ்ந்ததாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம உத்தியோகத்தர்கள், தங்கள் பணிகளை அச்சமின்றி செய்யத்தக்க சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.