கிளிநொச்சி மண்ணை இலக்கியத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஈழத்தின் மூத்த படைப்பிலக்கியவாதியும், தமிழ்த் தேசிய எழுச்சிக்காக தனது படைப்புகளால் பெயர் பெற்ற பேராளுமையாகக் கருதப்பட்ட நா.யோகேந்திரநாதன் அவர்கள் இவ் உலக பந்தத்திலிருந்து விடுபட்டார்.
இவரது மறைவு ஈழ மக்களின் மனதில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
அகவை மூப்பினாலும் உடல் நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழ்த் தேசியம் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமானவராக அவர் தனது ஆற்றல் முழுவதையும் இலக்கியப் பணியில் செலுத்தி வந்தார்.
தமிழ்த் தேசியப் பயணப் பாதைகளை தன் படைப்புகள் ஊடாக வெளிக்கொணர வேண்டும் என்ற பேரவாவில் எழுத்துலகில் இயங்கிக்கொண்டே இருந்த ஈழத்தின் புகழ்பூத்த பேராளுமையான அவர், ஈழவிடுதலைப் போர் குறித்த அனுபவங்களையும், ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த ஈழத்தின் அடையாள மனிதனாகவுமே இறுதிவரை இருந்தார்.
போராட்ட காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நா.யோகேந்திரநாதன் அவர்களின் ‘உயிர்த்தெழுகை’ நாடகம் ஈழ உணர்வாளர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை மேலுயர்த்தி, எமது மக்களின் உணர்வுகளில் நிறைந்த மனிதனாக அவரை மாற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்தை தன் இதயத்தே சுமந்த ஓர் பேனாமுனைப் போராளியாக விடுதலைப் போராட்ட காலத்தில் எத்தனை வீரியத்தோடு அரசியல், நாடக, வானொலித் துறை சார்ந்து இயங்கினாரோ, அதே வீரியத்தையும், விவேகத்தையும் படைப்பிலக்கியம் என்னும் துறைக்குள் ஒருசேர இணைத்து, புனைவுகள் அற்ற போரியல் ஆவணங்களாக தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்தவண்ணமிருந்த அவரின் எழுத்துலகப் பணி, ஒரு விடுதலைப் போராளியின் ஆத்மதாகம் நிறைந்த பெரும்பணியாகவே இருந்தது.
நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் தொடர்களின் வெளியீட்டின் பின் நோய்வாய்ப்பட்டிருந்த நா.யோகேந்திரநாதன் அவர்கள் அதிலிருந்து ஓரளவு மீண்ட பின் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நாவலை எழுதியிருந்தார். உலகப் போரியலின் வரலாற்றுத் திருப்புமுனையான ‘குடாரப்புத் தரையிறக்கம்’ குறித்துப் பேசும் 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் வரலாற்று நாவலை எழுதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.