பதினைந்து வயது காதலியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி வன்புணர்வு செய்ததாக கூறப்படும் 23 வயது காதலனை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் சனத் நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.
கனேகம வடக்கு, பம்பரவனகந்த பத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி காலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் பத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மறுநாள் காலை சிறுமி பொலிஸ் நிலையம் வந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, நேற்று முன்தினம் இரவு, வெறிச்சோடிய வீட்டில் தனியாக இருந்ததாக கூறினார்.
சிறுமியின் கூற்று உண்மையல்ல என்று சந்தேகித்த பொலிசார், அவர் இரவைக் கழித்ததாகக் கூறப்படும் வெறிச்சோடிய வீட்டிற்குச் சென்று, அங்கு யாரும் தங்கியதற்கான அறிகுறிகளைக் காணாததால், அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர்.
தான் கூறியது பொய் என்றும், காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் சந்திக்க சென்றதாகவும் அங்கு கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாக காதலனுடன் உறவில் இருந்ததால், 18ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அத்தை வீட்டிற்கு செல்லலாமென காதலன் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காதலன் அவரை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இரவில் கத்தியை காட்டி மிரட்டி, அடித்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் காதலனின் வற்புறுத்தலின் பேரில் தான் பொய் சொன்னதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதன்படி, தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான காதலன் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.