26.3 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இந்தியா

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாததற்கும், மெதுவாக நகர்வதற்கும் காரணம் என்ன?: இந்திய வானிலை மைய தலைவர் விளக்கம்!

”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப் பெறக்கூடும். அதன்பின்னர் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ம் தேதி) கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கின்றபோது, பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின்னர் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ம் தேதி) கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கின்றபோது, பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில், டெல்டா மாவட்டங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. நவ.29-ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நவ.30-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

டிச.1-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், தேனி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று முதல் நாளை மாலை வரை வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். சென்னையில் இன்று இரவு தொடங்கும் மழை படிப்படியாக அதிகரிக்கலாம்.

நாளை (நவ.29) மாலை முதல் நவ.30-ம் தேதி மதியம் வரை, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் நவ.30-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரையில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 350 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 346 மி.மீ. இது இயல்பை ஒட்டியுள்ள அளவாகும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதற்கு, வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் விரிவடைதல் போன்ற பல காரணங்கள் உள்ளன. நவ.26 மற்றும் 27 தேதிகளில், காற்று குவிதல் நல்லதொரு நிலையில் இருந்தது. ஆனால், நேற்று இந்த காற்று குவிதல் குறைந்துள்ளது. அதேநேரம் வளிமண்டலத்தின் மேல்பகுதியில், காற்று விரிவடைதல் தொடர்ந்து நிலை கொண்டிருக்கிறது. அதேபோல், காற்றின் திசைமாறும் மற்றும் வேகம் மாறும் பகுதி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியில், சாதகமாக இருக்கிறது.

அதேபோல், நிலப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், மேக கூட்டங்கள் உருவாவது குறைந்துள்ளது. மேலும், நகர்வு வெகுவாக குறைந்திருக்கிறது. வேகம் குறைந்ததால், புதன்கிழமையன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவேதான், வானிலை மையம் கொடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்டது. இலங்கைக்கு அருகில் இருக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கிச் செல்லும் காற்றின்போக்கு நிலப்பகுதியில் உராய்வு ஏற்படுவதால், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வட திசையில், அது நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு எதிரெதிர் திசையில் இருக்கின்ற காற்றின் போக்கு இருப்பதால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மழையளவும் குறைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” – விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

Pagetamil

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

புதிய காதலியுடன் திருமணம்; லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டியெறிந்த இறைச்சிக்கடைக்காரன்!

Pagetamil

Leave a Comment