தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- தற்போது உட்கட்சி மோதலை தீவிரமாக எதிர்கொண்டுள்ளது. கட்சித் தலைமை பக்கச்சார்பாக செயற்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினர், கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு, வெளியேற்றப்படும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த பின்னணியில், கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஆராய கட்சியின் தலைமைக்குழுவை கூட்டுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
ஆயினும், கட்சியின் ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில், கட்சியின் தலைமைக்குழுவில் செல்வம் அடைக்கலநாதன்- சுரேன் குருசாமி தரப்பிற்கு ஆதரவானவர்களே அதிகளவில் உள்ளதாகவும், அங்கு முறையான முடிவுகளை எடுக்க முடியாது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்ததற்கு, தலைமைக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும், தலைமைக்குழு தவறான முடிவுகளை எடுத்தது, அதிலுள்ள சிலர் எதேச்சாதிகரமாக செயற்பட்டனர், எனவே தற்போது தலைமைக்குழுவை கூட்டி, விமர்சனத்திலிருந்து கட்சித்தலைமை தப்பிக்க முடியாது, உடனடியாக மத்தியகுழு அல்லது பொதுக்குழுவையே கூட்ட வேண்டுமென முன்னாள் எம்.பி வினோநோகராதலிங்கமும் கட்சித் தலைமைக்கு காட்டமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கட்சியின் மத்தியகுழு அல்லது பொதுக்குழுவில் அதிக எண்ணிக்கையானவர்கள் உள்ளதால், அங்கு செல்வம்- சுரேனின் விருப்பப்படி முடிவுகளை எடுக்கக்கூடிய சூழல் இல்லை. இதனாலேயே, மத்தியகுழு அல்லது பொதுக்குழுவை தவிர்த்து, தலைமைக்குழுவை கூட்டி தீர்மானம் எடுக்க கட்சித் தலைமை முயற்சிக்கிறது.
மத்தியகுழு அல்லது பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கட்சியின் பல உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
என்றாலும், உடனடியாக தலைமைக்குழுவை கூட்டி, விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற செல்வம்- சுரேன் தரப்பு விரும்புவதாக தெரிகிறது. தலைமைக்குழு தவிர்ந்த கட்சியின் வேறு கட்டமைப்புக்களில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைக்கும் நிலைமையில்லை. ரெலோவின் கணிசமான பிரமுகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
என்றாலும், கடந்த தேர்தல் சமயத்தில் தன்னைப்பற்றி பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தனது தேர்தல் வெற்றியை பாதித்ததாக சுரேன் குறிப்பிட்டு- விந்தனை வெளியேற்றும் முயற்சியில் மும்முரமாக உள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன் புதிதாக வந்து ஆதிக்கம் செலுத்துகிறார் என ஏற்பட்ட எதிர்ப்பை ஒத்த நிலைமையே தற்போது ரெலோவுக்குள் எழுந்துள்ளது. புதிதாக கட்சிக்குள் வந்த சுரேன் – கட்சித்தலைமையுடன் கொண்டுள்ள ‘ஏதோவொரு’ உறவின் காரணமாக- கட்சிக்குள் தீர்மானம் எடுக்கும் சக்தியாக உருவாகி- கட்சிக்குள் குழப்பங்களை உருவாக்கி வருவதாக எதிர்ப்பாளர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
விந்தனை வெளியேற்றும் சுரேனின் முடிவை, கட்சித் தலைமையும் தீவிரமாக ஆதரித்தால், அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் ரெலோவுக்குள்ளும்- இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கல்களை ஒத்த நிலைமையே ஏற்படும்.