பொலேரோ ஜீப் சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கடவத்தை இன்டர்சேஞ்சில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனத்தில் குறைபாடுள்ள பிரேக் விளக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு ரூ. 600 க்கு ஈடாக, இரண்டு சிகரெட்டுகள், இரண்டு வெற்றிலை சுருள்கள் ஆகியவற்றை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
சாரதி பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ கவனத்தை ஈர்த்ததையடுத்து, நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி மயூர பெரேராவின் உத்தரவின் பேரில் விசாரணையைத் தொடர்ந்து சார்ஜென்ட், கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த சாரதி, நவம்பர் 17ஆம் திகதி காலியில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த போது, கடவத்தை இன்டர்சேஞ்சில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீப்பின் பிரேக்குகள் செயல்படவில்லை என்று கூறிய பொலிசார், சட்ட நடவடிக்கையை தவிர்க்க இலஞ்சம் கேட்டனர்.
விசாரணையின்படி, சாரதி இலஞ்சப் பொருட்களை அருகிலுள்ள உணவகத்தில் இருந்து வாங்கி நெடுஞ்சாலை நுழைவாயிலில் உள்ள பொலிசாரிடம் ஒப்படைத்தார். அதுவரை, ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.