சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு, இயந்திர எண் இல்லாத மிட்சுபிஷி வகை ஜீப் பயன்படுத்தியது தொடர்பில் முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கார் விற்பனையாளர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இசுரு சேரம் என்ற சந்தேக நபரின் சகோதரன் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை திருமணம் செய்துள்ள நிலையில், இது தொடர்பான உண்மைகளை கண்டி நீதிமன்றில் தெரிவித்து அவருக்கு எதிராக பயணத்தடையை நேற்று (12) பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்காக ஆனிவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு பல தடவைகள் சென்றதாகவும், ஆனால் அவர் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்கள் தொடர்பான நிபுணர் அறிக்கைகளைப் பெற்ற பின்னர், குறித்த பிஎம்டபிள்யூ ரக கார் உதிரிபாகங்களுடன் இணைக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜீப் வண்டியின் சேஸ் எண் அழிக்கப்பட்டுள்ளதால், இது அரசுக்கு சொந்தமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த இரண்டு வாகனங்களும் ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையவை.
1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி செய்யப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்த இரண்டு வாகனங்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




