குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக ஃபொக்ஸ் நியூஸ் கணித்துள்ளது. தேர்தல் நிலவரமும் ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்வதை போலுள்ள நிலையில், அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதிர்ச்சியூட்டும் அரசியல் மறுபிரவேசம் ஏற்படும் நிலைமையேற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாக முன்னரே, டொனல்ட் ட்ரம்ப் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் வெற்றி உரையாற்றினார்.
“இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.
இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். இராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம்.
உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என ட்ரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.
இதனிடையே, கடலா ஹாரிஸ் ஆதரவு முகாம் சோர்வுற்றுள்ளது. ஹாரிஸ் தனது அல்மா மேட்டர் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடம் பேசவில்லை. அவர் இன்று ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என திட்டமிடப்பட்டிருந்தது. அவரது பிரச்சார இணைத் தலைவரான செட்ரிக் ரிச்மண்ட், நள்ளிரவுக்குப் பிறகு கூட்டத்தில் சுருக்கமாக உரையாற்றினார், ஹாரிஸ் புதன்கிழமை பொதுவில் பேசுவார் என்று கூறினார்.
ட்ரம்ப், நாட்டின் பரந்த பகுதிகளில் பலத்தை வெளிப்படுத்தி, கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புற மையங்கள் வரை எல்லா இடங்களிலும் தனது 2020 முடிவுகளை விட மேம்பட்ட முடிவுகளை பெற்றார்.
வாக்களிப்பின் பின்னரான எடிசன் நிறுவன கருத்துக்கணிப்புகளின்படி, ஹிஸ்பானியர்கள், பாரம்பரியமாக ஜனநாயக வாக்காளர்கள் மற்றும் 2020 இல் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வைக் கடுமையாக உணர்ந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடமிருந்து ட்ரம்ப் அதிக ஆதரவைப் பெற்றார்.
சுமார் 31 சதவீத வாக்காளர்கள் பொருளாதாரம் தங்களின் முக்கிய பிரச்சினை என்று கூறியுள்ளனர், மேலும் அவர்கள் டிரம்பிற்கு 79 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்துள்ளனர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 45 சதவீத வாக்காளர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர், மேலும் அவர்கள் 80 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை ட்ரம்பை ஆதரித்தனர்.