29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
விளையாட்டு

2வது டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி: தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்ப யணம் செய்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து சகல விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 156 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி, நியூஸிலாந்தை விட 103 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் ரொம் லதம் 86 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். ரொம் ப்ளண்டெல் 41 ரன்களையும், க்ளன் பிலிப்ஸ் 48 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் 69.4 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, ஜடேஜா 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

359 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியின் ஓப்பனர் ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட்டானார். ஷுப்மன் கில் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒற்றை ஆளாக நின்று சிறப்பாக விளையாடி யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களில் விக்கெட்டானார். ரன் எதுவும் எடுக்காமல் ரிஷப் பந்து ரன் அவுட்டானார். 17 ரன்களில் விராட் கோலி வெளியேறினார். 9 ரன்களில் சர்ஃபராஸ் கான் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள் வரை தாக்குப்பிடித்தார். 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 178 ரன்களைச் சேர்த்தது.

அஸ்வின் – ஜடேஜா ஓரளவுக்கு போராட, மிட்செல் சாண்ட்னர் 18 ரன்களில் அஸ்வினை அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 1 ரன்களிலும், போராடிய ஜடேஜா 42 ரன்களிலும் அவுட்டாக 60.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்களைச் சேர்த்து தோற்றது. இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், க்ளன் பிலிப்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2012 க்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தத் தொடர் வெற்றிகளை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து உடைத்துள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது. அதன் பின் 12 ஆண்டுகள் சொந்த மண்ணில் தோல்வியே இல்லை என்ற நிலையில், தற்போது தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!